ரயில்வே கேட்.

***************

பெட்டிகளை எண்ணி முடிக்கும்

முன்னம் புகை தொடரி

கடந்து போய் விட்டது 


ரயில்வே கேட் முன்

ஒரு கையில் என்னையும்

மறு கையில் மாட்டையும்

பிடித்தபடி அப்பா.


பெட்டிகளை எண்ணி முடிக்கும்

முன்னம் டீசல் தொடரி

கடந்து போய் விட்டது 


ரயில்வே கேட் முன்

ஒரு கையில் சைக்கிளையும்

மறு கையில் புத்தகத்தையும்

பிடித்தபடி நான்


பெட்டிகளை எண்ணி முடிக்கும்

முன்னம் மின்சார தொடரி

கடந்து போய் விட்டது 


ரயில்வே கேட் முன்

ஒரு கையில் ஸ்டியரிங்கையும்

மறு கையில் செல்போனையும்

பிடித்தபடி பிள்ளை

அருகில் நான்


ரயில்வே கேட்டிடம்

சொல்லி வைத்திருக்கிறேன்

புல்லட் தொடரியின் 

பெட்டிகளை எண்ணுவதற்கு

பேரனோடு வருவேன்

என்று.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்