தரு.
*****************,
ஊருக்கு வந்த பேரனிடம்
மாம்பழத்தை அரிந்து
தந்த படியே பாட்டி
கடாயை வளர்த்தா நம்ம
மாரிலே பாயக்கூடும்
என்று சொல்லும் போது
அப்பா திரும்பி பார்த்தார்
மகாலட்சுமியா நெனச்ச
மாடு கூட முட்டக் கூடும்
என்று சொல்லும் போது
அம்மா எட்டிப் பார்த்தாள்
கழுதை கூட கடுப்பு வந்தா
காலால் எத்தக் கூடும்
என்று சொல்லும் போது
தாத்தா இருமினார்
நாய் நன்றி மறந்து போனா
நம்மளயே கடிக்க கூடும்
என்று சொல்லும் போது
பணியாள் முறைத்தாள்
பச்சைக்கிளி பாசத்தை மீறி
பறந்து போக கூடும்
என்று சொல்லும் போது
பேரன் சிணுங்கினான்
அதனால இதுல எதையும்
வளர்க்காம
ஆசையா மரத்த வளர்த்தேன்
அதுல பழுத்ததுதான்
இந்த பழம் என்றாள்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக