இருக்கை
இருக்கை.
************
எங்கே பேருந்து போகிறது
என்ற கேள்வியுடன் உள்ளே
ஏறியவன் இருக்கை ஒன்று
இருக்கக்கண்டு பாய்ந்து
அமர்ந்துக் கொண்டேன்
எதுவரை என்று அருகில்
இருந்தவர் கேட்க இறங்கும்
நிறுத்தத்தை சொன்னேன்
இடையில் ஏறி இடையில்
இறங்குகிறீர் என்றார்
தலையை ஆட்டினேன்
உலகம் எனும் பேருந்தில்
நம் பயணத்தை போல
என்றார்
சிக்கிக்கொண்டோமோ
என்று தோன்றியது
மழுப்பலாக சிரித்தேன்
வெளியே பார்த்தவாறு
இந்த அழகுல இருக்கைய
பார்த்தா பாயறது என்று
கர கரத்தார்
நற நறவென பற்கள்
கடிபடும் சத்தம் கேட்டது
சட்டென எழுந்து எதையோ
கேட்பது போல் ஓட்டுனர்
அருகில் சென்று நின்று
கொண்டேன்
அந்த இருக்கை ஆள்
இல்லாமலே பயணித்தது
நின்றபடியே பயணித்து
என் நிறுத்தத்தில் இறங்கி
நிம்மதியாய் மூச்சு விட்டேன்.
சட்டென ஒரு கொசு
ஙொய்யென்ற சத்தத்துடன்
காதுக்குள் புகுந்து
நானும் இங்கதானய்யா
இறங்கனும் என்றது.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக