ஊக்கு.

********

அவனது மரப்பெட்டியில் 

சிறு காகிதத்தில் மடித்து

பத்திரமாய் வைக்கப் பட்டிருந்த 

அந்த பழைய ஊக்கு 

அவளை குழப்பியது

 

என்ன ஊக்கு இது

பல் குத்திய ஊக்குமில்லை 

முள் எடுத்த ஊக்குமில்லை


பட்டனில்லா சட்டையில்

குத்திய ஊக்குமில்லை


வாரறுந்த செருப்பில்

குத்திய ஊக்குமில்லை


புடவை மடிப்பு கலையாது

குத்திய ஊக்குமில்லை


வெள்ளி ஊக்குமில்லை

தங்க ஊக்குமில்லை


அவன் வந்ததும் கிண்டலாக

உங்க பெட்டிக்குள் எதுக்கு 

இத வச்சிருக்கீங்க என்று 

கேட்டவள் அவன் பதிலில்

வாயடைத்து போனாள்


சின்ன புள்ளைங்களா

எங்களை விட்டுவிட்டு 

அம்மா போனபோது அவ

மஞ்ச கயித்துல இருந்தது 

இது ஒன்னுதான் அதான் 

பத்திரமா வச்சிருக்கேன்

என்றான்


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்