நான் அவனில்லை

 நான் அவனில்லை

***************

சிறு வயது முதலே

எனக்கும் அவனுக்கும்

ஏட்டிக்கு போட்டிதான் 


பஞ்சு மிட்டாய் கேட்டால்

மூக்கிலும் உதட்டிலும்

பிசு பிசு வென ஒட்டும்

வேண்டாம் என்பான்


எதிர் வீட்டு பெண் என்னை

காதலிக்கிறாள் என்றால்

வெறும் கற்பனை என்று

இதயத்தை உடைப்பான்


மேலதிகாரி தொல்லையால்

வேலையை விட நினைத்தால்

என்னை முட்டாள் என திட்டி

அனுசரித்து போ என்பான்


மகள் மீதான பாசத்தால்

உள்ளூர் மாப்பிள்ளை

தேடினால்

காலத்துக்கேற்ப மாறிட

அறிவுறுத்துவான்


ஓய்வூதிய பணத்தை 

பிள்ளைகளுக்கு பிரித்து 

தர நினைத்தால் தடுத்து

ஏமாளித்தனமாய் எதையும்

செய்யாதே என்பான்


இன்று அவனிடம் நான்

உடம்பு ஒத்துழைக்கவில்லை

போயிட்டா நல்லது என்றேன்

அவசர படாதே நேரம் வரட்டும்

ஒன்னா போகலாம் என்றான்


எதுக்கு அங்கேயும் வந்து

ஏட்டிக்கு போட்டியா பேசவா

என்று சொல்லி விட்டு

சிரித்தேன்


மாமா தனக்கு தானே

பேசிக்கொண்டு தனியே

சிரிக்கிறார் என்று அடுத்த

அறையில் பேசுவது காதில்

விழுந்தது


மைண்ட் வாய்ஸ் வெளியே

கேட்குது போல என்றேன்

அவன் கண்ணை சிமிட்டி

முதன் முறையாக 

ஆமாம் என்றான்.


(விஞ்ஞானி)












கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்