சிரத்தை

 சிரத்தை.

++++++++++

குழந்தை கேட்டாள் மொத்தம்

எத்தனை படிகள் என்று

அவன் எண்ணிக்கையை

சொல்ல

அப்பாவும் பொண்ணும்

படியேற துவங்கினார்கள்


கொஞ்சம் ஏறியதும் இன்னும் 

எத்தனை படிகள் இருக்கு

என்றாள் குழந்தை

பதில் சொன்னவன்

முடியலையா என்றான்.

முடியும் என்றது குழந்தை 


கொஞ்சம் ஏறியதும் அதே

கேள்வி

பதில் சொன்னவன் 

நான்னா தூக்கிக்கவா

என்றான்

அடுத்த முறை அதே கேள்விக்கு

கையை பிடிச்சுக்கவா என்றான்

அடுத்து ஒரு முறை நிழலில்

 உட்கார்ந்து போவோமா என்றான் 

எதையும் வேண்டாம் என்று

சொல்லிவிட்டு படியேறியது

குழந்தை


உச்சியை நெருங்குகையில்

ஒரு நிழல் மண்டபத்தில் அவன்

ஓரமாக அமர்ந்து கொண்டான் 


இன்னும் எத்தனை படிகள் 

என்றது குழந்தை

கொஞ்சம் தான் வந்துவிட்டோம்

என்றான்

அப்புறம் ஏன் உட்கார்ந்துட்ட

என்றது 

முடியலைம்மா என்றான்

நான்னா தூக்கிக்க வா என்றது

உன்னால் முடியாதே என்றான்

அப்ப கைய புடிச்சுக்க

அழைச்சிட்டு போறேன்

என்றது 

சரி என்றான்


மேலே கோவிலுக்குள் பரபரப்பு

சாமிய காணவில்லை என்று


வெளியே தன் அப்பா கையை

பிடித்து கொண்டு பத்திரமாக 

சிரத்தையோடு படியேறி வரும்

குழந்தையை ரசித்தப்படி 

நின்றுகொண்டு

இருந்தது சாமி.


(விஞ்ஞானி)





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்