யார் சார் அவன்
யார் சார் அவன்.
*****************
வாங்கித்தா என ஆசையுடன்
கேட்கும் குழந்தையின்
பார்வையில்
அவன் அனைத்தும்
வாங்கித் தர வல்லவன்
சீட்டு பணம் எடுக்க முடியுமா
என் வினவும் மனைவியின்
பார்வையில்
அவன் கடனை உடனை
வாங்கி சமாளிக்க கற்றவன்
பார்த்தால் நலம் விசாரிக்கும்
எதிர் வீட்டுகாரரின்
பார்வையில்
அவன் பிரச்சனை ஏதுமில்லா
நிம்மதியான சுகவாசி
பார்வையிலே எழ வைக்கும்
வயதான சக பயணியின்
பார்வையில்
அவன் பேருந்தில் நின்றபடி
வர வல்ல பலசாலி
உட்கார்ந்தப்படியே வணக்கம்
கூறும் அலுவலக காவலாளி
பார்வையில்
அவன் இவனை போலவே
கூலி வாங்கும் ஊழியன்
கச்சிதமாய் வேலை வாங்கும்
அவனது முதலாளி
பார்வையில்
அவன் அவருக்கு உழைக்க
பிறந்த வாயிலாப்பூச்சி
தட்டில் காசு விழ அண்ணாந்து
வாழ்த்திடும் பிச்சைக்காரன்
பார்வையில்
அவன் தினமும் படியளக்கும்
கர்ண மகாராஜன்
கோவிலுக்குள் வருவதை
கண்டும் காணா குருக்கள்
பார்வையில்
அவன் கன்னத்தில் தப்பு
போட்டு விட்டு ஓடும் பக்தன்
எல்லாம் சரி அவன் தினமும்
கும்பிடும் அந்த கடவுளின்
பார்வையில்
யார் சார் அவன்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக