அனுபவம்
அனுபவம்.
***********
தூங்கும் பாவனையில்
ஊர் வரும் வரை கண்களை
திறப்பதில்லை என்ற முடிவுடன்
கண்களை மூடிக்கொண்டேன்
ஆனால் இரண்டாம் வகுப்பு
இருக்கை பெட்டியின்
எல்லா பக்க இரைச்சலும்
காதை கண்ணாகியது.
பாலங்கள்
எதிர் திசையில்
விரையும் வண்டி
நிற்காத நிறுத்தங்கள்
நின்று நகரும் இடங்கள்
வியாபாரிகள்
மாற்று திறனாளி யாசகர்கள்
சக பயணியர்
என்று அனைத்தையும்
அனைவரையும்
ஒலி வடிவிலேயே அறிய
முயன்றதில் இரண்டு மணி
நேரம் ஓடிவிட்டது
இறங்கும் போது கதவருகே
நின்றிருந்த பார்வையில்லா
பிச்சைக்காரர் கையில்
பத்து ருபாய் பணத்தை
திணித்து விட்டு இறங்கினேன்
நடிக்கிறான் சார் என்றார்
உடன் இறங்கியவர்.
நடிக்கிறதும் கஷ்டம்தான் சார்
என்றேன் நான்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக