கவிதைகள்

 

1.

உனைக் காணாது வரும் வேதனை

தினம் கண்ணீரில் ஆழ்த்துதெனை

துயர் தீயின் முனை 

நெஞ்சில் தீண்டுதெனை

இந்த வலி தீர என்றுதான் காணபேன் உனை

கண்ணீரின் மாறாத தடம் ஆனதே-கன்னம் 

காயாத ஓடைக்கு இடமானதே

மண் வீழ்ந்து வீணான தேனானதே-காதல் 

மீளாத துயிலுக்கு ஆளானதே

நீ நீங்கின் வாழாத உயிரானதே-உடல் 

தான் நீங்கி தனியாக தவிக்கின்றதே

விண்மீதில் காற்றாக அலைகின்றதே-அது 

பண்பாடி உன்னை தேடி அழைக்கின்றதே

ஓயாத புயலாக நினைவானதே-அங்கு 

காற்றாடும் சருகாக மனமானதே

ஆறாத காயங்கள் உருவானதே-அதை

தீ நாக்கு சுவை பார்க்க ரணமானதே 

நீ நீராடும் நீரோடை போலானதே-கண்கள் 

தூங்காது செந்தூர நிறமானதே

கார்மேகம் தான் சூழ்ந்த நிலவானதே-நெஞ்சம் 

நீருக்குள் நெருப்பாக எரிகின்றதே

மணலான நதியாக உணர்வானதே-வெறும் 

மரமாக தரைமீதில் உடல் சாய்ந்ததே

நீயில்லாத நேரங்கள் விஷமானதே-உன் 

நினைவில்லா நிலைதானே சாவென்பதே.


2.




என் கண்களில் உனக்கு 

செய்தியில்லை

என் சொல்லிலும் உனக்கு

சுகம் இல்லை 


கல்லிலும் முள்ளிலும் 

என் பாதை

இதில் உடன்வர உனக்கு

ஏன் ஆசை 


உனக்கென நான் வந்து

பிறந்தேனா - இல்லை

எனக்கென நீ இங்கு

வளர்ந்தாயா

யாருக்கு யாரென

அறிந்திருந்தால் - இந்த

பிரிதலும் துயரமும்

வாராதே. 


என் கண்களில் உனக்கு 

செய்தியில்லை

என் சொல்லிலும் உனக்கு

சுகம் இல்லை



என் துயர் உனதென

அழுதாயா - இல்லை

நான் உன்வலி 

தாளாதழுதேனா 

நமக்கென இந்த 

மண்ணுலகில்

நம்மை தவிர 

யாரழுவார்



என் கண்களில் உனக்கு 

செய்தியில்லை

என் சொல்லிலும் உனக்கு

சுகம் இல்லை



என் நினைவுகள் ஓய்கையில்

கனவினில் நீ - அந்த

கனவுகள் கலைகையில் 

நினைவினில் நீ

என் உயிரிலும் உணர்விலும்

கலந்தவளே

நம்மிடை சுவரொன்றை

எழுப்பியதார் 



என் கண்களில் உனக்கு 

செய்தியில்லை

என் சொல்லிலும் உனக்கு

சுகம் இல்லை








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்