இடுகைகள்

கள யதார்த்தம்.

 கள யதார்த்தம். **************** மெத்து மெத்து என்று அவளுக்கு மட்டுமே  பரிச்சயமான  சன்னமான காலடி சத்தம் வாசலருகே கேட்க  முப்பது வருடங்கள் மனம்  பின்னோக்கி ஓட வாசலை நோக்கி ஓடினாள் அங்கே ஒரு பூனை சென்று  கொண்டிருந்தது அவள் தன் உணர்வில் இருந்து மீளும்‌ முன் தரையில் செருப்பு உரசும்  ஓசை முன்னே வர பின்னே வந்து கொண்டு இருந்தான் அவள் மகன். தன்னையே பார்த்தப்படி  நிற்கும் அம்மாவை தாண்டி செல்லும்போது  ஒரு நொடி நின்று என்னாச்சி மறுபடியும் சண்டையா என்று சற்று எரிச்சலுடன் கேட்டு விட்டு உள்ளே போனான் (விஞ்ஞானி)

மைனர் தாத்தா.

 மைனர் தாத்தா. ********************* மைனர் புறப்பட்டாச்சு கிண்டலாய் குரல் கேட்டது காதில் வாங்காது பெரியவர் புறப்பட்டார் காலையில் ரயிலடியில் யாருடனாவது பேசியபடி வண்டிகள் வந்து போகும் வரையிலும் மதிய உணவுக்கு பின்  ஏரிக்கரை வண்டிப் பாதை அருகே மரத்தடி மேடையில்   அரை தூக்கத்திலும் மாலை முழுவதும் பேருந்து  நிலையத்தில் டீக்கடை பெஞ்சில் பழைய தினசரி செய்தி தாள்களை  புரட்டியபடியும் இரவு திண்ணையில் தன் வயது கிழங்களுடன்  அரட்டை அடித்துக்கொண்டும்  எப்பவோ ஓடி போன  பிள்ளை திரும்பி வத்தால் இடம் தெரியாமல் தவிக்க கூடாது என்ற எண்ணத்தில் அங்கும் இங்கும் இருந்து காத்திருக்கும் கண்களுடன் ஒவ்வொரு நாளையும் கழிக்கின்றார்  மைனர் தாத்தா. (விஞ்ஞானி)

அனுபவம்

 அனுபவம். *********** தூங்கும் பாவனையில் ஊர் வரும் வரை கண்களை திறப்பதில்லை என்ற முடிவுடன் கண்களை மூடிக்கொண்டேன் ஆனால் இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டியின் எல்லா பக்க இரைச்சலும் காதை கண்ணாகியது. பாலங்கள் எதிர் திசையில்  விரையும் வண்டி நிற்காத நிறுத்தங்கள் நின்று நகரும் இடங்கள் வியாபாரிகள் மாற்று திறனாளி யாசகர்கள்  சக பயணியர் என்று அனைத்தையும் அனைவரையும் ஒலி வடிவிலேயே அறிய முயன்றதில் இரண்டு மணி நேரம் ஓடிவிட்டது இறங்கும் போது கதவருகே நின்றிருந்த பார்வையில்லா பிச்சைக்காரர் கையில்  பத்து ருபாய் பணத்தை திணித்து விட்டு இறங்கினேன் நடிக்கிறான் சார் என்றார் உடன் இறங்கியவர். நடிக்கிறதும் கஷ்டம்தான் சார் என்றேன் நான். (விஞ்ஞானி)

பிணக்கு

பிணக்கு ********* பிரிவது என்ற முடிவுக்கு வந்ததும் அவள் அவனை பார்த்து  சொன்னாள். போகிறதுதான் போகிறாய் போகும் முன்  கடைசியாக ஒரு முறை  உன் காதலை சொல்லிவிட்டு  போ என்று. சட்டென அந்தி மழையில் நனைந்து  செந்தனல் ஒன்று குளிர்ந்து போனது (விஞ்ஞானி)

புறங்கூற்று

 புறங்கூற்று. ************* புற வாசல் வழியே  பூனை போல் வந்து ஓசையின்றி ஓதிய சாத்தான் சொல் கேட்டு  சாத்திடின் தெருக்கதவை தேடி வரும் தேவன் திறவாத தெருவாசல் கண்டு திரும்பி போகக் கூடும் உறவு ஒட்டாது தாழ் போடும் அன்பு பாழாகும் பெயர்  வள்ளுவரும்  பட்டு தான் எழுதினாரோ  புறங்கூற்றை கடிந்தொரு அதிகாரம். (விஞ்ஞானி)

நம்ம அப்பாவா.

 நம்ம அப்பாவா. ***************** அப்பாவின் கவிதை  குப்பையில் ஒன்றை உருவி படியெடுத்து தான் எழுதியதாய்  வாத்தியாரிடம் காட்டினான் அந்த சிறுவன் அவர் அவன் கன்னத்தை  செல்லமாய் கிள்ளி இது பாரதியார் பாட்டுடா என்று சொல்லி சிரித்தார் பையன் திகைத்து நின்றான் என்னது நம்ம அப்பா பாரதியாரா என்று. (விஞ்ஞானி)

கரிசனம்

 கரிசனம். **************** மருத்துவர் அனுமதியுடன் பிரசவ அறையில் மகன் பிறந்த போது உடனிருந்த கணவனை அறைக்கு வந்த பின் சுற்றி நிற்கும் சொந்தங்கள்  நடுவே காணாது  எங்கே அவர் என்று கேட்டாள் அவர் அவரது அம்மாவை அழைத்து வர அவசரமாய் அந்த அம்மா வீட்டுக்கு ஓடியிருக்கிறார் என்ன திடீர் கரிசனமோ என்று பதில் வந்தது  தான் பெற்ற மகனை  உற்று பார்த்த அந்த  புது தாய்க்கு புரிந்தது புன்னகைத்தாள். (விஞ்ஞானி)